பின்னணி
மலேசியாவில் தமிழ்மொழி பயன்பாட்டினைத் தரப்படுத்தும் நோக்கில் டேவான் பஹாசா டான் புஸ்தாக போன்றதொரு அமைப்பு அமைப்பது தொடர்பாகப் பலரும் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இதன், முதன் கட்டமாக, 1980களில் மயூக் (MAIUG) எனப்படும் இந்தியப் பல்கலைகழகங்களின் மலேசியப் பட்டதாரிகள் சங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, கோலாலுப்பூர், சிலாங்கூர் சீன அமைப்பினருடன் (KLSCH) கலந்துரையாடி, அவர்கள் நிறுவியிருந்த களஞ்சிய மையத்தையும் ஆய்ந்தனர். எனினும், அம்முயற்சி இடையிலேயே முடங்கிப் போனது.
இதன் பின்னர், 2011ஆம் ஆண்டு வாக்கில், இம்முயற்சி மீண்டும் மலாயாப் பல்கலைக்கழக மொழியியல் புல பேராசிரியர் முனைவர் கி.கருணாகரன் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடரப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் வெற்றி பெறாது நின்றுபோனது.
அடுத்து, 2014ஆம் ஆண்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தரப்படுத்துதலுக்கும் ஓர் அமைப்பு உருவாக்க மலாயாப் பல்கலைக்கழகத்தில், மொழி மொழியியல் புலமும் இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக முன்வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது; அதனை அடிப்படையாகக் கொண்டு அப்பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக்கழகத்துடன் ஒத்திணக்கமும் பெறப்பட்டது. ஆனால், இம்முயற்சியும் இடையில் முடங்கிப் போனது.
அதன் பின்னர், நின்று போன இந்த முயற்சி மீண்டும் உயிர்ப்புப் பெற்றது. அதாவது, 2018ஆம் ஆண்டு, தமிழ் அறவாரியத்தின் முனைப்பில், தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு தலைவராக முனைவர் குமரவேலு அவர்களை தமிழ் அறவாரியம் நியமித்தது. இந்த மாநாட்டிற்கு இணை ஏற்பாட்டாளர்களாகத் தலைமையாசிரியர் மன்றம், மலாயாத் தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செயல்பட்டன.
இம்மாநாட்டில் கட்டுரையாளர்கள், பேராளார்கள், காப்பகம் அமைக்க வேண்டியது தொடர்பான தீர்மானத்தை முன்வைத்து, அஃது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுக் காப்பகம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக முனைவர் குமாரவேலு தொடர்ந்து செயல்பட்டார். இப்பணிகள் 2018ஆம் ஆண்டு இறுதியில் துவங்கின. பல கூட்டங்களுக்குப் பின்னர், காப்பக அமைப்பிற்கான முன்வரைவு தயாரிக்கப்பட்டது.
இதனிடையே சீன மொழிக் காப்பகம் ஒன்று இதுபோன்ற நோக்கத்திற்காகச் செயல்பட்டு வருவதை அறிந்து, அவர்களோடு சில சந்திப்புகள் நடத்தி அவர்கள் செயல்படும் மாதிரியை ஏற்றுச் சில மாற்றங்கள் செய்து துணை கல்வியமைச்சரின் பார்வைக்குக் கொண்டு சென்று, அவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனை அங்கீகரிக்கும் வகையில், 17.4.2019இல், கல்வி அமைச்சில், அதன் துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சிங்-உடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், காப்பக அமைப்பின் பணிக்குழுவினர், கல்வி அமைச்சின் ஆலோசனை மன்ற குழு உறுப்பினர் திரு.இராமநாதன், காப்பக அமைப்பின் புரவலர் டத்தோ ஆ.சோதிநாதன், கல்வியமைச்சைச் சார்ந்த முக்கியப் பகுதிகளின் நிகராளிகள், உயர்கல்விக்கழக நிகராளிகள், இயக்க நிகராளிகள், ஊடகத்துறை நிகராளிகள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முயற்சியின் உச்சமாக, மலேசியத் தமிழ்மொழிக் காப்பக அதிகாரப்பூர்வ அமைப்பு நிகழ்வு, டேவான் பஹாசா டான் புஸ்தகாவில் 3.5.2019ஆம் நாள் கல்வி துணையமைச்சரின் தலைமையின்கீழ் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் அமைப்புத் தலைவராகக் கல்வி துணையமைச்சரும், அமைப்புத் துணைத்தலைவராகவும் காப்பகத்தின் நிருவாகத் தலைவராகவும் டத்தோ சிறி ஆ. தெய்வீகன் அவர்களும் பொறுப்பேற்றார்கள்.
காப்பகம் அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அமைப்புக் கடிதமோ அங்கீகாரக் கடிதமோ கிட்டவில்லை. சில காரணங்களால், இது தடைபெற்றிருந்தது. இதற்கிடையே, டத்தோ சிறி ஆ. தெய்வீகன் நிருவாகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதால், செயலவை சீரமைக்கப்பட வேண்டியதாயிற்று.
இதன்படி, முன்னாள் விரிவுரைஞர் திரு.கு. நாராயணசாமி அவர்கள் காப்பகத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட முதல் துணைத்தலைவராகவும், நிருவாகத் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதற்கான அதிகாரத்துவக் கடிதம் 16.10.2019இல் வெளியிடப்பட்டது. பின்னர், 22.10.2019இல் நாடாளுமன்ற அலுவலகத்தில துணைக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அமைப்புக் கடிதத்தைத் துணையமைச்சர் வழங்கினார். அன்றுமுதல் காப்பகம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. புதிய செயலவையினர் பட்டியலும், பிற செயல்திட்டக் குழுவினர் பட்டியலும் காப்பக வலைத்தளத்தில் காண்க.